என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன்: சஞ்சய் ராவத்!

சிவசேனாவின் சஞ்சய் ராவத் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணிகள் சில காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தைத் தனியார்த் துறையினருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிவசேனா முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பிக்கு நெருக்கமான தொழிலதிபர் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராக சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், முதல்முறை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இடையே ஜூலை 1ஆம் தேதி சில மணி நேரம் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் இரு முறை சம்மன் அனுப்பியும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரில் ஆஜராவதாகவும் அவகாசம் கோரி இருந்தார்.

இதற்கிடையே இன்று காலை அமலாக்கத் துறையினர் சஞ்சய் ராவத் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சஞ்சய் ராவத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பத்ரா சால் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாததாலேயே இந்த நடவடிக்கை எடுத்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இது அரசியல் பழிவாங்கல் காரணமாகப் போடப்பட்ட வழக்கு என சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்.

இன்று காலை சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில், “எந்தவொரு ஊழலுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே மீது ஆணையாக இதை நான் சொல்கிறேன். பாலாசாகேப் எங்களுக்கு போராட கற்றுக் கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். இது பொய்யான குற்றச்சாட்டு. போலியான ஆதாரம். நான் சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா” என்று பதிவிட்டு உள்ளார்.

சஞ்சய் ராவத் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டு உள்ளதாக தாக்கரே ஆதரவு சிவசேனா தலைவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அதேநேரம் அவர் விசாரணைக்கு ஆஜராகத் தவறியது ஏன் என பாஜகவின் ராம் கதம் கேள்வி எழுப்பினார். “நிரபராதி என்றால் அவர் ஏன் அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்? பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக நேரமில்லையா” என்று சாடி உள்ளார்.