ஆங்கிலேயர்களிடம் 6 முறை மன்னிப்பு கேட்டவர் சாவர்க்கர்: ஜவாஹிருல்லா!

9 ஆண்டுகளில் 6 முறை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தியாகச் சுவரில் சாவர்க்கர் படம் இடம்பெற்றுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் 75வது விடுதலை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்திதிடலில் சக்ரா விஷன் இந்தியா அமைப்பு சார்பில் தியாகச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 27ம் தேதி தியாகச்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்துள்ளார். சாவர்க்கர் 9 ஆண்டுகளில் 6 முறை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர். இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டீஷாரிடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற ஒரே ‘போராளி’ சாவர்க்கர் மட்டுமே. நேதாஜி படைக்கு எதிராகப் படை கட்டியவர். தேச தந்தை காந்தியடிகளின்படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சாவர்க்கர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றியதற்காக அந்தமான் சிறையில்அடைக்கப்பட்டவர்கள் பலர் சித்ரவதைகளை அனுபவித்து அங்கேயே உயிர் நீத்தனர். ஆனால் அந்தமான் சிறையில் எல்லா வகையான சலுகைகளையும் அனுபவித்து மன்னிப்பு கடிதங்கள் எழுதி விடுதலை பெற்றவர் சாவர்க்கர். இதன் பிறகு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டவர் சாவர்க்கர். புதுச்சேரி விடுதலைக்குச் சற்றும் தொடர்பில்லாதவர் சாவர்க்கர். அவரது பெயரைத் தியாகசுவரில் பதிப்பது என்பது வரலாற்றுத் திரிபு ஆகும். எனவே அவரது பெயர் எக்காலத்திலும் அங்குப் பதிவு செய்யப்படலாகாது. இந்த வரலாற்றுத் திரிபைக் கண்டித்துப் போராடியவர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.