சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும்: ரகுராம் ராஜன்!

இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொழில் வல்லுநர்கள் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை என்ற தரப்பில் பேசினார். அவர் பேசியதாவது:-

இந்தியாவின் வளர்ச்சியை ஜனநாயகம் தடுத்து நிறுத்துவதாக சில தரப்பினர் பேசுகின்றனர். ஏன், வளர்ச்சிக்காக இந்தியாவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் எதேச்சதிகார சிந்தனை கொண்ட தலைமை தேவை என்று நினைக்கின்றனர். ஆனால் முற்றிலும் தவறானது. இது பொருட்கள் மற்றும் மூலதனத்தை வலியுறுத்தும் தோல்வியடைந்த வளர்ச்சி மாடலை அடிப்படையாகக் கொண்டது. இது மக்களுக்கான, புதிய சிந்தனைகளுக்கான மாடல் அல்ல. அதேபோல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால், செயல்திறன் குறைவாக இருக்கிறது. இதுவே நாம் செல்லும் பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜனநாயகத்தையும், அதன் அமைப்புகளையும் வலுப்படுத்துவதில் உள்ளது. அதுமட்டுமல்ல, சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும். அதேபோல், மக்களிடையே மனக்கசப்பை உருவாக்கும்.

நாட்டின் அரசியல்வாதிகள் சிறுபான்மையினரை தாக்குகிறார்கள் என்றால், அது வேலைவாய்ப்பை உருவாக்க முடியாமல், பிரச்சனையை திசைதிருப்பும் முயற்சிதான். அதனால் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை. அதேபோல் சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதற்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததே மிகமுக்கியக் காரணம். அண்மையில் 35 ஆயிரம் இடங்களுக்கான ரயில்வே துறை வேலைக்காக 12.5 லட்சம் பேர் விண்ணத்துள்ளார்கள். இதுவே இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்திற்கான சரியான சான்று. அதேபோல் கல்விக்காக செலவிடாமல், அரசின் பார்வை வேறாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள் ஏராளமானோர் இடைநின்றுள்ளனர். அவர்கள் தான் இந்தியாவின் எதிர்கால மூலதனம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.