போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், எனக்கு வீடு இல்லை: ரணில்

தனது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. பொருளாதாரத்தில் சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கைக்கு கொரோனா ஊரடங்கு முதல் நெருக்கடியை தந்தது. அதனால், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. இதனிடையே இயற்கை விவசாயத்திற்கு மாற அரசு நிர்பத்தித்ததும் தேயிலை ஏற்றுமதியை பாதிப்படைய செய்தது. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தில் கடந்த மாதம் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜ்பக்சேவின் வீடு போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் இலங்கையில் இருந்து தப்பித்து சிங்கப்பூர் சென்ற பின் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இருந்தும், மக்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கண்டி நகரில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:-

இலங்கையில் போராடும் மக்கள் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர். எனக்கு வீடில்லை. என் வீட்டை போராட்டக்காரர்கள் எரித்துவிட்டார்கள். ஒன்று அவர்கள் என் வீட்டைத் திருப்பிக் கட்டித் தர வேண்டும். இல்லாவிட்டால் தேசத்தை மீள்கட்டமைக்க உதவியாக இருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் தொடர்ந்து அமைதிக்கு பிரச்னையை ஏற்படுத்துவதால், சர்வதேச நிதியத்திடமிருந்து உதவி பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்போது உள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் யார் நெருக்கடிக்கு காரணம் என்று கூறி அரசியல் செய்ய விரும்பவில்லை.

உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டன. இந்தச் சூழலில் நம் ஒரே நம்பிக்கை சர்வதேச நிதியம் தான். அந்த உதவிகள் கூட நம் நாட்டை முழுமையாக மீட்டெடுக்காது. ஆனால், பிரச்னைகளை சரி செய்ய சில வழிகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.