மதுரையில் தமிழ்நாடு அரசு கட்டி வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி 5 வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி பெயரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை தமிழ்நாடு அரசு கட்டி வருகிறது. 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் 7 மாடிகளை கொண்ட இந்த நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த ஜுன் மாதம் மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட 6 மாத காலத்திற்குள் 80% அளவுக்கு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று காலை 5 வது மாடியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து இருக்கிறார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆட்டோவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலாளியின் பெயர் இக்பால் என்றும் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்து உள்ளது.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக பணிகளில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த இக்பால் கடந்த 2 மாதங்களாக இங்கு தங்கியிருந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.