நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகையை ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் நடத்தி வந்தது. இதனிடையே, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடியே 25 லட்சம் ரூபாயை வட்டியில்லா கடனாக கொடுத்தது. அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பி செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக் கொண்டது. இதன் மூலம் வெறும் 50 லட்சம் ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், 90 கோடி ரூபாய் கடனுக்காக அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக் கொண்டதாகவும், இதில் முறைகேடு இருப்பதாகவும் கூறி, பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரரமணியன் சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் அவரது மகனும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் ஆகியோரையும் அமலாக்கத் துறை விசாரித்தது. இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலகத்தில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அசோசியேட்டடு ஜெனரல்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரியில் இயங்கி வரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.