மேற்கு வங்க அமைச்சரவையில் 5 புது முகங்களுக்கு வாய்ப்பு!

முதலமைச்சர் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 5 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை கடந்த மாதம் இறுதியில் அவரை கைது செய்தது. இதை அடுத்து, அமைச்சர் மற்றும் கட்சிப் பதவியில் இருந்து, பார்த்தா சாட்டர்ஜியை நீக்கி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதனால் அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டிய நிலைமைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தள்ளப்பட்டார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும், அப்போது, அமைச்சரவையில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா, முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, பாபுல் சுப்ரியோ, சினேகாஷிஷ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர் ஆகியோர், கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். பிர்பஹா ஹன்ஸ்தா, பிப்லாப் ராய் சவுத்ரி, தஜ்முல் ஹொசைன் மற்றும் சத்யஜித் பர்மன் ஆகிய நான்கு பேர், இணை அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு, மேற்கு வங்க மாநில ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவையில் 5 புது முகங்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது. கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ள பாபுல் சுப்ரியோ, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.