ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பாஜக எம்.பி.க்கு ரூ.20,000 அபராதம்!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பேரணியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பாஜக எம்பிக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக மத்திய அரசு பல்வேறு நிகழ்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ’ஹர் கர் திரங்கா’ என்கிற நாட்டின் ஒவ்வொரு வீடுகளிலும் இந்தியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதற்காக, டெல்லி செங்கோட்டையிலிருந்து பாஜகவின் முக்கிய உறுப்பினர்கள் இருசக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டனர். இதில் பாஜக எம்.பி. மனோஜ் திவாரியும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், பேரணியின்போது மனோஜ் திவாரி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். பின், போக்குவரத்துக் காவலர்கள் அவருக்கும் வண்டியின் உரிமையாளருக்கும் சேர்த்து ரூ.20,000 அபராதம் விதித்தனர். இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் மனோஜ் திவாரி, “ஹெல்மட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன். அபராதத் தொகையையும் செலுத்தி விடுகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நீங்கள் தேவை என்பதால் பாதுகாப்பாக ஓட்டுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.