கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைக்கப்பட்டு, விசாரித்து அறிக்கை அளிக்க இருக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
இதுகுறித்து உள்ள தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் மின்சார வினியோகத்தில் எந்த பாதிப்பும் வர கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் சீரான மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக 14 ஆயிரத்து 434 மெகாவாட் மின்சார பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மழையின் காரணமாக 12 ஆயிரத்து 400 மெகாவாட்டாக தேவை குறைந்தது. இதில், காற்றாலை மூலம் 4 ஆயிரம் 100 மெகா வாட்டும், சூரிய சக்தி மூலம் 2 ஆயிரத்து 250 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்சார வாரியம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை போடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வாரியம் சார்பில் புகார் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கிற கட்டணங்களில் வீடுகளுக்கான நிலைகட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. டிரான்ஸ்பார்மரில் அதற்கான மீட்டர் முதலில் பொறுத்தப்பட்ட பிறகு தான் ஸ்மார்ட் மீட்டருக்கு போக முடியும். எனவே, டிரான்ஸ்பார்மருக்கான மீட்டர் பொறுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஆதாரம் பெற்ற பிறகு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அதற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடக்கும்.
கடந்த காலங்களில் கேங்மேன் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தகுதி தேர்வில் கலந்து கொண்டு மீதம் உள்ள 5 ஆயிரம் பேரும் எங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். காலி பணியிடங்களுக்கு ஏற்ப தான் பணி நியமனம் வழங்க முடியும். மாறாக தகுதி தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பணி வழங்க இயலாது. அவர்களுடைய போராட்டம் குறித்து முதல்அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு இறுதி செய்து அறிக்கை அளிக்க உள்ளது. கேங்மேன் பிரச்சினை முடிந்த பிறகு தற்காலிக ஊழியர்கள் பிரசினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் மாநகராட்சி பகுதிகளில் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்காமல் பணிகளில் ஈடுபடுவதால் மின்சார வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க 3 துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.