சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத்தை வரும் 8-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்புத் திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சஞ்சய் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரிக்கப்படுகின்றன. இதுதொடா்பான வழக்கில் சஞ்சய் ராவ கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டாா்.
அதேசமயம், சஞ்சய் ராவத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றாா். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, எம்.ஜி.தேஷ்பாண்டே, சஞ்சய் ரெளத்தை காவலில் வைத்து விசாரிக்கப் போதுமான அடிப்படை இருப்பதாகக் கூறி, அவரை ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டாா்.
இந்நிலையில், இன்று காவல் முடியும் நிலையில், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 நாள்கள் சஞ்சய் ராவத்தை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.