அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
ஜூலை 27ஆம் தேதி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். வழக்கமாக 6 மணிக்கு நிறைவடையும் விசாரணை அன்றைய தினம் இரவு 11 மணிவரை நீண்டது. இந்நிலையில் அமலாக்கத் துறையையும், சி.பி.ஐ.யையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாகப் பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு என்று அவர் பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்திற்கு ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று செம்பட்டி அருகே ஆத்தூர் பிரிவில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர். அதிமுக ஆட்சியில் உதய்மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதுதான் மின்கட்டண உயர்வுக்கு காரணம்.
சுதந்திரம் வாங்கிய பின்பு உப்புவுக்கும், உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி போட்டது பா.ஜ.க அரசுதான். நீட் தேர்வை கொண்டு தமிழக மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கனவை அழித்த மத்திய பா.ஜ.க அரசு இப்போது தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில் கியூட் தேர்வை கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழக மாணவ, மாணவியர்கள் பல்கலைகளில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் படிப்பதற்காக காந்திகிராம கிராமிய பல்கலை துவக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலையில் கியூட் நுழைவுத்தேர்வு கொண்டுவந்துள்ளதால் கிராமப்புற மாணவ, மாணவிகள் அங்கு சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு கல்வி நிறுவனங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன.
விவசாயத்தை மேம்படுத்த பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு கறவைமாடுகள் வாங்கி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படுகிறது.
அமலாக்கத் துறையையும், சி.பி.ஐ.,யையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு. நீதிமன்றங்கள் இருப்பதால் தான் இந்தியாவில் இன்னும் நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை அடுத்தடுத்து விசாரிக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமலாக்கத் துறையை வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பழிவாங்கும் நிலையை கையில் எடுத்தால், இலங்கை நிலைமை தான் ஏற்படும். அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது. மத்திய அரசு ஆணவமாகவும், அதிகாரமாகவும் செயல்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது.
கடந்த 10 ஆண்டுகளாக பிரேக் இல்லாத வண்டியாக அதிமுக ஓடியது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உயர்த்துவார். இவ்வாறு அவர் கூறினார்.