காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த நான்கரை மணி நேரமாக அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், நேற்று டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனா். யங் இந்தியா அலுவலகம் சீலிடப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், சோனியா காந்தி இல்லத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் விசாரணை நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.