போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அனுமதியின்றி ஒரு வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். மேலும், முகாமில் சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் பகுதியில், வீடு வாடகைக்கு எடுத்து அனுமதியின்றி இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குடியிருப்பதாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தேசிய புலனாய்வு முகமை போலீஸ் இன்ஸ்பெக்டர் எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர், இன்று காலை அந்த வீட்டை சோதனை செய்தனர். இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அந்த வீட்டிற்குள் சென்று அங்கு குடியிருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் முகமது பைசல் என்பதும், இலங்கை கொழும்பு நகரத்தைப் பூர்வீகமாய் கொண்டவர் என்பதும் தெரிய வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் தங்கி இருந்தபோது தேசிய புலனாய்வு முகமை போலீசார், முகமது பைசல் மீது வழக்கு பதிவு செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனிடையே டெல்லியை விட்டு வெளியேறிய முகமது பைசல், பின்னர் தமிழ் நாட்டிற்கு வந்து ஓ.எம்.ஆர். சாலையில் கழிப்பட்டூர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகனுடன் தங்கி இருந்ததும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தையூர் பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது. அண்மையில் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த ஒரு நபருடன், முகமது பைசல் செல்போனில் பேசியதை அடுத்து, அதன் மூலம் என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், முகமது பைசலையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.