‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவைச் சேர்ந்தவருமான ஆ.ராசா, அந்த கட்சி எம்பி கனிமொழி உள்ளிட்ட, 14 பேரையும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
‘குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க, சிபிஐ தவறி விட்டது’ என, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, சிபிஐ மேல்முறையீட்டு மனு தொடர்பாக சிபிஐ தரப்பு வாதங்களை அடுத்த மாதம் செப்டம்பர் 22, 23 தேதிகளில் முன் வைக்க அனுமதி அளித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தினமும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு, முக்கியத்துவம் வாய்ந்தது. பொது வாழ்வில் நன்னடத்தை, அதிகாரிகளின் நேர்மை தொடர்பான பிரச்னைகள் சம்பந்தப்பட்டது. தேசியளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வழக்கு என்பதால் விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு பொது மக்களின் நலன்களை உள்ளடக்கியது என்பதால், வழக்கு மற்றும் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, நீதித் துறையின் நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க வேண்டும். வாதங்களை துவக்குவதற்கான நாளை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.