என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு இன்று (ஆகஸ்ட் 5) எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவ ரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டதை வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் மாண்புமிகு பிரதமர் மோடி தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் மின் தேவைக்கு பெரிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தை உருவாக்க 30 கிராம மக்கள் தங்களது நிலத்தை அரசுக்கு தாரை வார்த்தனர். அப்போது என்.எல்.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று நிலம் கொடுத்தவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த உறுதிமொழியை மத்திய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருகிறது.
சமீபத்தில் கூட என்.எல்.சி நிறுவனத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்ட 299 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை. அனைவரும் வட இந்தியர்கள். இப்படிப்பட்ட சூழல் தொடர் கதையாகி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.