பெரியார் கடவுளுக்கு எதிரி கிடையாது. கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகள் உச்சகட்டமாக மோதி வருகின்றன. அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதனை ஓபிஎஸ் கோஷ்டியின் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டவட்டமாக ஏற்க மறுத்தது. தற்போது இந்த பிரச்சனை நீதிமன்றத்தின் கைகளில் இருக்கிறது. இன்னொரு பக்கம் நானே அதிமுகவின் பொதுச்செயலாளர் என்கிறார் சசிகலா. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அமமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை வரும் 15-ந் தேதி சென்னையில் கூட்டியுள்ளார் டிடிவி தினகரன். அதிமுக கூட்டங்கள் நடைபெறும் அதே வானகரம் ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில்தான் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் டிடிவி தினகரன்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:-
அதிமுக பொதுக்குழுவை ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் ஜெயலலிதா நடத்துவார்; அதனால்தான் அந்த மண்டபத்தில் அமமுக பொதுக்குழுவை கூட்டி இருக்கிறோம். ஜிஎஸ்டி வரி விதிப்பு விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பொதுவாக பெட்ரோல், டீசல் விலை உயருகிற போது அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரத்தான் செய்யும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிறந்த எழுத்தாளர். அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தவறு இல்லை. ஆனால் அப்படி ஒரு பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கும் போது அதை திமுக கட்சி செலவில் அமைக்கலாம். அரசு செலவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தேவை இல்லை.
ஶ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என இந்து முன்னணியின் கனல் கண்ணன் பேசியிருக்கிறார். பெரியார் கடவுளுக்கு எதிரி கிடையாது. கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர இதர அனைத்தையும் நாங்கள் ஏற்கிறோம். பெரியார் சிலை கூட மனதுக்குள் ஶ்ரீரங்கம் பெருமானை வழிபடும் என நம்புகிறேன். இவ்வாறு தினகரன் கூறினார்.