முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்படி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இடுக்கி உட்பட கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக அதிகரித்து உள்ளது. கனமழை இது போன்று தொடர்ந்தால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயரும். இந்த சூழலில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்து பாதுகாப்பான அளவிற்கு நீர் மட்டத்தை பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதை கருத்தில் கொண்டு, அணையின் நீர் வரத்தை விட அதிக அளவு நீரை அணையிலிருந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
கரையோரம் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கேரள மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.