டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மத்திய பாஜக அரசின் போக்கை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கருப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்தப் போராட்டம் எதிரொலியாக டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா, சசி தரூர் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், “அனைத்து காங்கிரஸ் எம்பிக்களும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையை எழுப்புவதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் எங்களை இங்கிருந்து முன்னேற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். மக்களின் பிரச்னைகளை எழுப்புவதே எங்கள் வேலை, சில எம்பிக்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர்” என்றார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான, ப.சிதம்பரம் கூறுகையில், “விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போராட்டம் இது. விலைவாசி உயர்வு அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு அரசியல் கட்சிகள் என்ற ரீதியிலும், மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியிலும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க கடமைப்பட்டு உள்ளோம். அதை தான் செய்து வருகிறோம்” என்றார்.