குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் இதில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த மாதம் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலமும் முடிவடைய இருப்பதால் 14 வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 725 பேர் வாக்களித்தனர். 92.94% வாக்குகள் பதிவாகின. பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.