நாடு முழுக்க உணவின்மையால் குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு: ப.சிதம்பரம்

பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம் போதிய உணவின்மைதான் என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

6 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை ரத்தசோகையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தசோகை பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை 58.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 67.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்கிறார். அமைச்சர் சொல்வது போல் ரத்த சோகைக்கு ஒரே ஒரு காரணம் என்ன தெரியுமா போதிய உணவின்மைதான். ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ பணவீக்கம் எந்த மக்களையும் பாதிக்கவில்லை என்கிறார். மக்கள் குறிப்பாக குழந்தைகள் விலைவாசி உயர்வால் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூதத தலைவர் ப சிதம்பரமும் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசுக்கு செவியே கிடையாது. செவி இருந்தால்தானே சாய்க்க முடியும். மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதையே அரசு மறுக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு மக்களவை பேசிய நிதித்துறை அமைச்சர் ஜிஎஸ்டி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்கிறார். இப்படி சொல்வதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. மக்கள் பாதிக்கப்படவில்லையா? நிதி துறை அமைச்சர் வரலாறு பேசுகிறாரே தவிர பொருளாதாரத்தை பற்றி பேசவில்லை. ஒருவேளை அவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். நிதி அமைச்சராக இருக்க முடியாது. வேலைவாய்ப்பின்மை, உணவின்மை உள்ளிட்டவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள. இதை பார்த்துவிட்டு மக்கள் பாதிக்கப்படவிலலை என்று சொன்னால் என்ன செய்வது? நாங்கள் போராடத்தான் வேண்டும்” என்று அவர் கூறினார்.