முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக பேரணி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த திமுக பேரணியில் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2018 ஆகஸ்ட் 7ம் தேதி காலமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க இவரின் நினைவு தினம் திமுகவினர் மூலம் அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பாக இன்று அமைதி பேரணி நடத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகே பேரணி தொடங்கியது. கருணாநிதி சிலைக்கு மரியாதை செய்து பேரணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக சார்பாக நடத்தப்படும் இந்த பேரணி காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெறுகிறது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் இருந்து திமுக நிர்வாகிகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இந்த பேரணியில் முதல் வரிசையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் எ வ வேலு, பெரியசாமி, எம்பி கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர். இதில் அமைச்சர் சேகர் பாபு மட்டும் வரிசையில் இல்லாமல் முன்னே 50 மீட்டர் தூரத்தில் நடந்து சென்றார். போலீசோடு நடந்து சென்ற அவர்தான் வழி ஏற்படுத்திக்கொடுத்தார். பாதையில் நின்ற சிலரை நகர்ந்து செல்லும்படி அறிவுறுத்தினார். போலீசாருக்கு ஆலோசனை வழங்கபடியே முன்னே நடந்தார். முதல் வரிசையில் வந்த முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் எ வ வேலுவிடம் சீரியஸாக பேசிக்கொண்டு இருந்தார். அவர் சில விஷயங்களை பேசியபடி இருந்தார். கனிமொழி இரண்டாவது லைனில் வந்தார். இதை பார்த்த எம்பி தயாநிதி மாறன், கனிமொழியை முன்னால் வரும்படி கூறி, அழைத்து வந்தார். கனிமொழி முதல் லைனுக்கு வந்த பின் முதல்வர் ஸ்டாலின் அவரிடம் சில முறை பேசினார். சில மீட்டர்கள் தூரம் இவரக்ள் சீரியசாக ஆலோசனை செய்தபடி வந்தனர். இந்த பேரணிக்கு வந்த பலரும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை தேடினர். பலரும் உதயநிதி எங்கே என்று தேடினர். ஆனால் அவர் முதல் வரிசையில் வரவில்லை. உதயநிதி ஸ்டாலின் பின் வரிசையில் தொண்டர்களுடன் நடந்து வந்தார்.