நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு மாநாடு நேற்று தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். சுப்பராயன் எம்.பி. வரவேற்றார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், இந்த மாநாடு நடக்கும் தருணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு தகைசால் விருதை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வருகிற 9-ந் தேதி மாநாட்டில் தேசிய கொடி ஏற்றப்படும். வருகிற 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள், வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
தமிழகத்தையும் தாண்டி இதுபோன்ற மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க இடதுசாரி கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சங்பரிவார் இயக்கம் மற்ற மாநிலங்களில் காலூன்றியதைப்போல் தமிழகத்தையும் கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கேரளாவையும், தமிழகத்தையும் குறி வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் எந்தஒரு மூலையிலும் இடதுசாரி சிந்தனை இருக்கக்கூடாது என பா.ஜனதாவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தப்பித்தவறி 2024-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்து, சமூக நீதி மேம்பாடு செய்திருக்கிறோம். மொழி உரிமை, பெண்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம். இவற்றுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். தத்துவம் இந்தியாவில் நிலவுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். சுதந்திரம், சமூகநீதி, மனித முன்னேற்றம் ஆகியவற்றுக்கு எதிரான தத்துவம் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. அதற்கான காரணத்தை அறிய வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் சிறந்த, வலுவான கூட்டணியை உருவாக்கி நாம் வெற்றி பெற வேண்டும். இது ஒரு வாழ்வா சாவா போராட்டம். இந்த போராட்டம் மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும். நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது பெற்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “இந்தியாவை அச்சுறுத்தும் பா.ஜனதாவை வேரோடு சாய்க்க இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை இணைக்க இந்த மாநாடு முன்மாதிரியாக அமைய வேண்டும். பா.ஜனதா தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கேரளாவில் கால் பதிக்க முடியாது. தமிழகத்தில் தப்ப முடியாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மட்டுமல்ல, பா.ஜனதாவோடு சேர்ந்திருப்பவர்களையும் தோற்கடிக்க இந்த மாநாட்டில் உறுதியேற்று உழைப்போம்.” என்றார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “எங்களிடையே வண்ணங்கள் மாறுபட்டாலும் எண்ணங்கள் ஒன்றுதான். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியேற கூடாது என்பதை ஆய்வு செய்வதற்கான தொடக்கம் இதுவாகும். சமூக வலைதளங்களில் வேகமாக பொய்யை பரப்பி வருகிறார்கள். சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்திய அளவில் தன் முனைப்பு இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும். அதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு முக்கியமானது” என்று கூறினார்.
கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மேயர் தினேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். ஸ்டாலின் சமூக நல்லிணக்கம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றார். மேலும், அனைத்து மொழிகளையும் ஒரே போலப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் எனக் கூறுவதால் தேச விரோதிகள் என்கிறார்கள் என்றும், நாட்டில் ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டு வரத் துடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.