நொய்டாவில் அரசியல்வாதி என்று கூறிக் கொள்ளும் ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டின் முகப்பை புல்டோசர் கொண்டு இடித்த நடவடிக்கை வெறும் நாடகம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பல ஆண்டு காலமாக, அவர் சட்டத்துக்கு விரோதமான கட்டுமானத்தை பாஜக அரசு தெரிந்துகொள்ளவில்லையா? என்றும் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமறைவாக இருக்கும் தியாகியின் நொய்டா வீட்டில் கட்டப்பட்டிருக்கும் சட்டவிரோத கட்டுமானங்களை உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் நேற்று காலை புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளினர். கிராண்ட் ஒமாக்ஸி குடியிருப்பில் வசித்து வரும் தியாகி, தன்னைத்தானே பாஜகவைச் சேர்ந்த அரசியல்வாதி என்று கூறி வந்த நிலையில், அவர் அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணை கடுமையாக தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “இத்தனை ஆண்டுகளாக இந்த கட்டுமானங்கள் சட்டவிரோதமானவை என்று பாஜக அரசுக்கு தெரிந்திருக்கவில்லையா? தற்போது செய்திருக்கும் புல்டோசர் நடவடிக்கை அனைத்தும் வெறும் நாடகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.