தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், மெத்தனமாக இருப்பதால்தான் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வி.பி. துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல்லில் மாவட்ட பாஜக சார்பில் பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, தேசியக்கொடி வழங்கும் பணிகளை அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி தொடங்கி வைத்தார். மேலும் நாமக்கல் நகரில் உள்ள பொய்யேரி கரை பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை, வழங்கினார். அப்போது பொதுமக்களிடம் ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து 75-வது சுதந்திர பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 75-ம் ஆண்டு சுதந்திர பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக, வீடுகள் தோறும் பொதுமக்கள் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய நாள்களில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர விழாவை கொண்டாட வேண்டும். சுதந்திர தினம் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டியது ஆகும். வீடுகளில் தேசிய கொடியேற்றும் நிகழ்வு அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என கட்சிகள் கூறியுள்ளதை நாம் வரவேற்கிறோம்.
அனைத்து மாநிலங்களோடும் இணக்கமாக இருந்து பொதுமக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பார்க்காமல் 8 கோடி மக்களின் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதியே திட்டங்களை அவர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கில் இருந்து வருவது என்பது உண்மைதான். விலைவாசி, ஜிஎஸ்டி, காய்கறி விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் கனிமொழி எம்பி பேசியதற்கு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதில் அளிக்கும்போது திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இதேபோல மக்களைப் பற்றி கவலைப்படாமல் வெளிநடப்பு செய்தார். ஒட்டுமொத்தமாக திமுக மக்கள் பிரச்னைகளை பேசுவதில்லை.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தனியாக சட்டம் இயற்றி காவல் துறையிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. ஆனால் அவ்வாறு செய்யாமல் தமிழக முதலமைச்சர் 233 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எதன் அடிப்படையில் கடிதம் எழுதுகிறார்? அவர்களுக்கு அதில் சம்பந்தம் உள்ளதா? அதற்கான அவசியம் மற்றும் சூழ்நிலை தமிழக முதலமைச்சருக்கு எப்படி வந்தது? வேறு மாநில முதல்வர்கள் இதுபோன்று செய்துள்ளார்களா.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஓராண்டில் பெண் குழந்தைகள் தற்கொலை அதிகரித்து விட்டது. கல்வி கற்க ஏற்படும் பிரச்சனைகள், பலாத்காரம் உள்ளிட்ட செயல்களால் இச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதே பாஜகவின் நீண்டகால வற்புறுத்தலாக இருந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
மத்திய அரசு போக்சோ சட்டத்தை இயற்றி கடுமையாக நடவடிக்கை எடுப்பதால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதனை மாநில அரசு முறையாக செயல்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை முழுமையாக கடைபிடித்து உத்தரவிட வேண்டிய முதல்வர் ஸ்டாலின், மெத்தனமாக இருப்பதால்தான் தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.