செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ஜெயலலிதா படம்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மேடை இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னை மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான வீரர்கள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்- வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டனர். அதேபோல இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின. இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இன்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்தது. இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது.

உக்ரைன் போருக்கு இடையிலும் பெண்கள் பிரிவில் அந்த அணியினர் தங்கம் வென்றனர். அதேபோல ஜார்ஜியா வெள்ளியையும் இந்தியா ஏ வெண்கலத்தையும் வென்றது. அதேபோல தனிநபர் பிரிவில் குகேஷ், நிகால் சரினுக்கு தங்கம் கிடைத்துள்ளது. அதேபோல ஒபன் பிரிவைப் பொறுத்தவரை உஸ்பெகிஸ்தான் தங்கத்தையும் அர்மீனியா வெள்ளியையும் இந்தியா பி அணி வெண்கலத்தையும் வென்றது. இது தவிர தனிநபர் பிரிவிலும் இந்தியாவுக்கு நிறைய பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதனிடையே இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. கடந்த மாதம் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை நிறைவு விழாவும் நடைபெறுகிறது. இதில் செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்க உள்ளார். ஒலிம்பியாட் தொடக்க விழாவைப் போலவே நிறைவு விழாவையும் பிரம்மாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகளும் நடந்துள்ளன. பல முக்கிய பிரபலங்களும் இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெறும் நிலையில், ஏற்கனவே நேரு ஸ்டேடியத்தில் மக்கள் திரளத் தொடங்கிவிட்டனர். அங்கு மேடையில் அமைக்கப்பட்டுள்ள திரையில் தமிழகத்தின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி படம் மட்டுமின்றி அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் இடம் பெற்று உள்ளது வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக உள்ளதோ அந்தக் கட்சியின் தலைவர்களின் படங்கள் மட்டுமே இடம் பெறும். ஆனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படமும் அவர் குறித்த தகவல்களும் இடம்பெறுகின்றன. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. கருப்பு சூட் அணிந்து இந்த விழாவிற்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பின்னணியில் ஒலிக்காக மாஸாக என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் தோனி பங்கேற்கவில்லை. தோனி இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வரவிருந்தார். ஆனால் அங்கிருந்து கிளம்புவது தாமதமானதால், அவர் சென்னை வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.

நிறைவு விழாவின் தொடக்கமாக, சிறுவர் சிறுமியர், சில விநாடிகளில் ரூபிஸ் கியூப் சால்வ் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் ‘ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் சிவமணி, ராஜேஷ் வைத்தியா , ஸ்டீபன், நவீன் ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.