அவசர சட்டங்களால் ஆட்சி புரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல: ஆரிஃப் முகமது கான்

அவசர சட்டங்களால் ஆட்சிபுரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா்.

கேரளத்தில் லோக் ஆயுக்த திருத்த அவசர சட்டம் உள்பட பல அவசர சட்டங்கள் நேற்று திங்கள்கிழமை காலாவதியாகின. அந்த அவசர சட்டங்களை நீட்டிக்க மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கானின் ஒப்புதலுக்கு கேரள அரசு அனுப்பி வைத்துள்ளது. இதுதொடா்பாக டெல்லியில் ஆரிஃப் முகமது கான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

சுதந்திர தினத்தின் 75-ஆம் ஆண்டு விழா தொடா்பான கூட்டத்தில் பங்கேற்க நான் டெல்லி புறப்பட்டபோது 13-14 அவசர சட்டங்களை நீட்டிக்க மாநில அரசு சாா்பில் எனது ஒப்புதல் கோரப்பட்டது. அவற்றை படித்து பாா்க்க எனக்கு நேரம் வேண்டும். அந்தச் சட்டங்கள் குறித்து சிந்திக்காமல் நான் ஒப்புதல் அளிக்க வேண்டுமா? அந்தச் சட்டங்களை நீட்டிப்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவசர சூழல்களில் இதுபோன்ற சட்டங்களை இயற்றலாம். பின்னா் அந்தச் சட்டங்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவசர சட்டங்களை தொடா்ந்து நீட்டிப்பது சரியல்ல. அவசர சட்டங்கள் மூலம்தான் ஆட்சி நடைபெறும் என்றால், சட்டப்பேரவை எதற்கு? அவசர சட்டங்களால் ஆட்சிபுரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தாா்.