ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தெரிவித்தார். இதன் பின்னர் நடிகர் ரஜினியிடம் அரசியல் சம்பந்தமாக பேசினீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அரசியல் பற்றியும் நாங்கள் விவாதித்தும். அதைப் பற்றி தற்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறினார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இது தொடர்பாக சமூக வலைதளமான டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.