சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதியை கைது செய்துள்ளோம் என தெரிவித்து உள்ளது. அதன்படி, சபாஉதீன் ஆஸ்மி என்ற திலாவர் கான் (பைரம் கான், அசார் என்ற பெயராலும் அழைக்கப்பட்டு உள்ளார்) என அந்நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் நகரில் அமிலோ என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பற்றி பிரசாரம் செய்து வந்ததுடன், அந்த இயக்கத்தில் இணையும்படி மக்களை ஈர்க்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர் கைது செய்து, பின்னர் லக்னோவில் உள்ள தலைமையகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவரது மொபைல் போனில் நடத்திய சோதனையில், நாட்டில் பயங்கரவாத மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களை வசீகரிக்கும் நோக்கிலான, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சமூக ஊடகத்துடனும் ஆஸ்மி தொடர்பில் இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 2018ம் ஆண்டில் பேஸ்புக்கில் தொடர்பு கிடைத்த பிலால் என்பவர் ஆஸ்மியிடம், ஜிகாத் மற்றும் காஷ்மீரில் முஜாகித் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றி கூறி, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியின் தொடர்பு எண்ணையும் கொடுத்துள்ளார்.
காஷ்மீரில் முஸ்லீம்கள் மீது நடந்த அராஜகங்களுக்கு பழிவாங்கும் நோக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு எப்படி தயாரிப்பது என்றும் கற்று கொண்டார். சமூக ஊடக செயலி வழியே, கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றிய பயிற்சியையும் ஆஸ்மி எடுத்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் ஐ.எஸ். அமைப்பு நிறுவும் திட்டம் நிறைவேறுதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார் என பயங்கரவாத ஒழிப்பு படை தெரிவித்து உள்ளது. போலியான இ-மெயில் ஐ.டி. மற்றும் பேஸ்புக் கணக்கை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரை பயன்படுத்தி தொடங்கி, அந்த அமைப்பின் உறுப்பினர்களை இலக்காக கொள்ளவும் சபாஉதீன் ஆஸ்மி திட்டமிட்டு செயல்பட்டு உள்ளார். ஆஸ்மியிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பயங்கரவாத ஒழிப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து ஆஸ்மியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.