கறுப்பு உடை அணிந்து போராட்டங்கள் நடத்துகிற தந்திரங்கள் மூலம் இழந்துவிட்ட மக்கள் நம்பிகையை காங்கிரஸ் கட்சியால் பெற முடியாது என பிரதமர் மோடி கடுமையாக சாடி உள்ளார்.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் 2ஜி எத்தனால் ஆலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேசியதாவது:-
பானிபட் எத்தனால் ஆலை டெல்லி, ஹரியானா மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும். இயற்கையை வழிபடும் தன்மை கொண்ட நம்மைப் போன்ற நாடுகளில், உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கு இணையாகக் கருதப்படுகிறது. நமது விவசாய சகோதர சகோதரிகள் இதனை புரிந்து கொள்வார்கள். நம்மைப் பொறுத்தவரை உயிரி எரிபொருள் என்பது பசுமை எரிபொருளாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எரிபொருள் என்று பொருள்படும். இந்த நவீன ஆலை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், நெல் மற்றும் கோதுமை பெருமளவில் சாகுபடி செய்யப்படும் ஹரியானா மாநில விவசாயிகள், தங்களது பயிர் கழிவுகள் மூலமும் லாபம் பெறலாம்.
பானிபட் உயிரி எரிபொருள் ஆலை, பயிர் கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்தும். இது பல்வேறு பலன்களை அளிக்க வகை செய்யும். முதல் அம்சம் யாதெனில், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் வலியிலிருந்து பூமித்தாய் விடுவிக்கப்படுவார். இரண்டாவது அம்சம், பயிர்க் கழிவுகளை அகற்றுவது மற்றும் அவற்றை அப்புறப்படுத்த புதிய நடைமுறைகள் உருவாவதுடன், அவற்றை எடுத்துச் செல்ல புதிய போக்குவரத்து வசதிகள் கிடைப்பதுடன், புதிய உயிரி எரிபொருள் ஆலைகள் தற்போது இந்த கிராமங்களில் புதிய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். மூன்றாவது அம்சம், விவசாயிகளுக்கு பெரும் சுமையாக, கவலை அளிப்பதாக இருந்த பயிர்க்கழிவுகள் தற்போது அவர்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தர வகை செய்யும். நான்காவது அம்சம், காற்று மாசுபாடு குறைவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்களிப்பு அதிகரிக்கும். ஐந்தாவது அம்சம் யாதெனில், நாட்டிற்கு மாற்று எரிபொருள் கிடைக்கும்.
அரசியல் சுயநலத்திற்காக குறுக்கு வழிகளை பின்பற்றும் மனப்பான்மை உள்ளவர்களால், எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண முடியாது . குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைத்தட்டல் மற்றும் அரசியல் ஆதாரங்களை பெறலாமே தவிர, பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக, பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் பணியை மேற்கொண்டுள்ளது. பயிர்க்கழிவுகள் தொடர்பாக பல ஆண்டுகளாக ஏராளமான தகவல்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், குறுக்கு வழி மனப்பான்மை கொண்டவர்கள் இதனை தீர்க்கவில்லை.
‘பராலி’ எனப்படும் பயிர்க்கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உழவர்-உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது, பயிர்க்கழிவுகளை கையாளும் நவீன எந்திரங்களுக்கு 80 சதவீத மானியம் வழங்கப்படுவதுடன், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆலை, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வழிவகை செய்யும். பயிர்க்கழிவுகளை எரித்ததால், அவப்பெயரை சம்பாதித்த விவசாயிகள், தற்போது உயிரி எரிபொருள் உற்பத்தி மற்றும் தேச நிர்மாணத்திற்கு பங்களிப்பை வழங்குகிறோம் என்று பெருமிதம் அடைகின்றனர்.
அமிர்த பெருவிழா கால கட்டத்தில், நாடு முழுவதும் மூவண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான சம்பவத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், நமது மன உறுதிகொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற நபர்களின் மனப்பான்மையை புரிந்துகொள்வது அவசியம். நம் நாட்டில் உள்ள சிலர் இதுபோன்ற எதிர்மறை சுழல் மற்றும் விரக்தியில் சிக்கியுள்ளனர் . அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியபிறகு, அதுபோன்ற நபர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. அதுபோன்ற விரக்தியில் இந்த நபர்கள் கருப்பு மேஜிக்கை நோக்கி செல்கின்றனர். ஆகஸ்ட் 5-ந் தேதி (காங்கிரஸ் கறுப்பு உடை போராட்டம்) நிகழ்ந்த சம்பவங்கள் இதுபோன்ற கருப்பு மேஜிக் மனப்பான்மையை பரப்பும் நிகழ்ச்சி. கருப்பு உடைகள் அணிவதன் மூலம் அவர்களது விரக்தியான காலகட்டம் முடிவுக்கு வரும் என அவர்கள் நினைத்தால், கருப்பு மேஜிக் மற்றும் மூடநம்பிக்கை பற்றி அறியாதவர்கள் என்பதோடு, அவர்கள் மீது மக்களுக்கு இனி நம்பிக்கை ஏற்படாது என்பதையும் அறியாதவர்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.