கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது
இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வெகுண்டெழுந்து கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதனால் கோத்தபய ராஜபக்ச இலங்கையிலிருந்து தப்பி சென்றார். இலங்கையில் இருந்து தப்பித்த முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது . சில தினங்களுக்கு முன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார் பின்பு அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் தாய்லாந்து செல்லவிருப்பதாகவும் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தாய்லாந்து நாட்டில் கோத்தபய ராஜபக்ச அடைக்கலம் கோரவில்லை என்றும் அவ்வாறு அடைக்கலம் கேட்டாலும் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இல்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் இலங்கையில் மின்சார கட்டணத்தை 75 சதவிகிதம் அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று(நேற்று) முதல் மின்சார கட்டணம் 75 சதவிகிதம் அதிகரிக்கப்படுகின்றது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் மின்சார கட்டண திருத்தம் சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2014ம் ஆண்டு 25 சதவிகித மின்சார கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 75 வீதத்தால் அது அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜியம் முதல் 30 அலகுகளுக்கு (யூனிட்) மாதம் ஒன்றிற்கு 198 ரூபா செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
31 முதல் 60 வரையான அலகுகளுக்கு மாதமொன்றிற்கு 599 ரூபாவும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 1,467 ரூபாவும் செலுத்த வேண்டும். மேலும், 91 முதல் 120 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில், 2,976 ரூபாவும், 121 முதல் 180 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் 5,005 ரூபாவும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 48 லட்சம் மக்கள் 90 அலகுகளுக்கு குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
30 வரையான அலகுகளுக்கு இதுவரை காணப்பட்ட 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 8 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 61 முதல் 90 அலகுகளுக்கு இடையில், ஒரு அலகுக்கு காணப்பட்ட 7 ரூபா 85 சதமான கட்டணம், தற்போது 16 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 27 ரூபா காணப்பட்ட நிலையில், அது தற்போது 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்கான அனுமதிக்கப்பட்ட மின்சார கட்டண அதிகரிப்பில் 50 வீத கட்டண அதிகரிப்பை மூன்று மாதங்களின் பின்னர் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி துறைகளின் மின்சார கட்டணத்தை டாலரின் செலுத்தும் பட்சத்தில், அதற்கு 1.5 சதவிகித நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 60 முதல் 65 வீதம் வரையான மின்சாரம், எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. அனல் மின் உற்பத்திகளுக்கு தேவையான கரியை, கடந்த ஜனவரி மாதம் 143 டாலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதுடன், அதே கரியை தற்போது 321 முதல் 350 டாலர் வரை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கின்றார்.