போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பாக ஆபரேசன் கஞ்சா செயல்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருந்தும், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்தே வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அதில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதேபோல் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி எடுத்தார். அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுபான கடை அதில், போதைப்பொருள் நடமாட்டத்துக்கு துணை செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக முதல்வா் கூறியுள்ளாா். ஆனால் முதல்வருக்கு மதுபானம்தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
தமிழகத்தில் போதைக்கு அடிமையானவா்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் மதுபானத்துக்கு அடிமையானவா்கள் எண்ணிக்கை தான் மிக அதிகம். முதல்வா் குறிப்பிட்ட கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள் ஆகியவற்றுக்கு மூலக்காரணம் மதுபானம் தான். எனவே, தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை முதல்வா் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.