கோவையில் விதிகளை மீறி மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் என பாஜகவினர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை – அவிநாசி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் அனைத்து கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் நேற்றிரவு 10 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கோவை மாவட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. போஸ்டர்களை கிழித்தெறிந்தும், அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். தி.மு.க.வினர் மற்றும் பா.ஜ.க.வினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போஸ்டர்களை கிழித்த பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கோவை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விதிகளை மீறி மேம்பாலத்திக் ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்கள் 3 நாட்களில் அகற்றப்படும். மேலும், கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வருவாய் கோட்டாட்சியரும், போலீசாரும் உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் நள்ளிரவு 2 மணி அளவில் கலைந்து சென்றனர். எனினும் 3 நாட்களில் திமுகவினரின் போஸ்டர்கள் அகற்றப்படாவிட்டால் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 16-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.