திமுக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?: விஜயகாந்த்

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? என்று திமுக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆகஸ்ட் 12 முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர், போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தனது கடமையை செய்ய தயங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கண்டிப்புடன் கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த நடவடிக்கை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், மதுக்கடைகளை திறந்துவைத்துக் கொண்டு, போதை ஒழிப்பு பற்றி தமிழக அரசு பேசலாமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அந்தவகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அரசுக்கு ஒரு கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன். இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். எனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

அதேபோல் மதுபானங்களால் ஏற்படும் போதையை ஒழிக்க தமிழக அரசு முன்வராதது ஏன்? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட மனம் இல்லாததால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் வாய்மொழி வார்த்தையாக இல்லாமல் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை. இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.