குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும்: அண்ணாமலை

பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த மாநில தலைவர் அண்ணாமலை, குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 76வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தேசிய கொடியை கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய அவர், “தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது, இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும்” என குறிப்பிட்டார். மேலும், அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழ்நாடு இந்தியாவின் விஷ்வகுருவாக வர வேண்டும் என்றும் அனைவரும் அதற்காக உழைத்திட வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சுதந்திரத்துக்கு பாடுபட்டதில் தமிழ்நாட்டின் பங்கு மிக அதிகம், மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரத்துக்காக போராடியுள்ளனர். கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் தேசியக்கொடி இல்லாத வீடுகளே இல்லை, இந்தியா ஒற்றுமையின் வடிவம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் காட்டியுள்ளனர். பலர் பாஜக அலுவலகங்களில் தேசியக்கொடியை பெற்று, தங்கள் இல்லங்களில் ஏற்றியுள்ளனர்.”

“லஞ்சம் வாங்குவோர், குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும். தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது, இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கேசவ விநாயகம், ஹெச்.வி.ஹண்டே, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், குஷ்பு, நாராயணன், வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.