புதிய கல்விக் கொள்கையில் கல்வியை வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் முந்தைய ஆண்டுகளை விடவும், நடப்பு ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் பண்டிகை போல் கொண்டாடி வருகின்றனர். இல்லங்கள் தோறும் தேசியக் கொடி என்று எங்கு பார்த்தலாலும், தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் பேரணி, விழிப்புணர்வு என்று கொண்டாடி வருகின்றனர். இதனிடையே டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
அதேபோல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். இதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நாடு விடுதலை பெற்று 76வது சுதந்திர ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை போற்ற வேண்டும். கொரோனா பரவலின் போது சுகாதாரத்துறை செயல்பாடுகள் அளவிட முடியாதவை. அதேபோல் விவசாயிகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச விளையாட்டுகளான காமன்வெல்த் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட், ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் சாதித்த பவானி தேவி, மாரியப்பன் தங்கவேலு, ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், பிரஞ்ஞானந்த உள்ளிட்ட அனைத்து வீரர்களும் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெயர் பெற்று கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், மனிதவளம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் கல்வித்துறை தரப்பில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயர் கல்வியில் இன்னும் வேகமாக முன்னேறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும். காலனியாதிக்கக் கல்வி முறையின் வழியில், வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடத் திறனையும் மட்டுமே உருவாக்குகிற கல்வித் திட்டம் செயல்பட்டது. நம்முடைய கல்வித் திட்டத்தை நவீனப்படுத்தும் புரட்சிகர முன்னெடுப்பே, தேசியக் கல்விக் கொள்கை 2020 ஆகும். புதிய கல்விக் கொள்கையில் கல்வியை வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் தமிழை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு இதுவே நேரம், சரியான நேரம். இவ்வாறு அவர் பேசினார்.