இந்தியாவை வல்லரசாக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

வரும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும் என்றும், இந்தியாவை வல்லரசாக்கும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் உணர்ச்சி பொங்கிட பேசினார்.

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்! சுதந்திர தினம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் மூவண்ணகொடி பறக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி தங்களின் உணர்வை தெரிவித்துள்ளனர். இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். விடுதலை போராட்ட வீரர்களின் நினைவை போற்றுவோம். அவர்களின் கனவை நிறைவேற்றும் நேரம் இது. தியாகங்கள் தேசபற்றை வளர்க்கிறது.

மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், எஸ்.பி. முகர்ஜி, சாஸ்திரி, அம்பேத்கர், லோகியோ ராஜாஜி, பகத்சிங், ராஜ்குரு, ஜெய்பிரகாஷ் நாராயணன், மங்கள் பாண்டே, நேதாஜி, ராணி வேலுநாச்சியார், சுப்பிரமணிய பாரதியார், பழங்குடியின விடுதலை வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாம் நினைவு கூர்வோம். சுதந்திரத்திற்காக அஹிம்சை, ஆயுதம், அரசியல் சாசனம், கொண்டு போராடினார்கள். ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்களை வெளியேற்றினால் பொருளாதாரம் பின்னோக்கி சென்று விடும் என்று கூறினார்கள். இன்று இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பலம். பன்முகத்தன்மை, பல மொழிகள் கொண்டது இந்தியா. பல்வேறு சவால்களையும் எதிர் கொண்டு இந்தியா எவ்வித தடையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனநயாகத்தின் தாய் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. 75 ஆண்டுகளாக நாம் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறோம். மக்களுக்கு அதிகாரம் வழங்கும் பணியை நான் செய்து வருகிறேன். இந்தியாவை வல்லரசாக்கும் வரை ஓயமாட்டேன்.

கடைசி மனிதனுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளது. நாட்டில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. நல்ல தீர்வுகளை வழங்கும் இந்தியாவை உலகம் உற்று நோக்கி பார்க்கிறது. பெரும் தொற்றான கோவிட்டை சிறந்த முறையில் எதிர்கொண்டோம். 200 கோடிக்கும் மேல் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர். நமது நாட்டை கண்டு நாமே கர்வம் கொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க மக்கள் விரும்புகின்றனர். உயர்ந்த சிந்தனைகளுடன் தொலைநோக்கு திட்டங்களுடன் இந்தியா பயணிக்க வேண்டும். வரும் 100 வது சுதந்திரஆண்டில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். 2047 க்குள் சுதந்திர வீரர்களின் கனவை நிறைவேற்றுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகளில் நாம் ஒரு நொடியை வீணாக்க முடியாது. ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்போம். நாட்டை முன்னேற்றுவோம்.

இந்தியாவை பலர் சந்தேகிக்கின்றனர். இந்த நிலத்தின் சிறப்பு அவர்களுக்கு தெரியாது. அனைவருக்கும் வளர்ச்சி, இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக வேண்டும். என்னோடு சேர்ந்து அனைவரும் உறுதி ஏற்று கொள்ளுங்கள். ஒருங்கிணைந்த உணர்வு தான் இந்தியாவுக்கு பலம். நமது பாரம்பரியம் கலாசாரத்தை காத்திட வேண்டும். இந்த உலகத்திற்கு வழங்கிட நம்மிடம் ஏராளம் உள்ளது. நாம் வளர வளர உலகம் வளரும்.

பெண்கள் குறித்த மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் போது நமது கனவுகள் மேலும் வளரும். பெண்களின் முன்னேற்றம் மிக அவசியமானது. அவர்களுக்கு நாம் உரிய மதிப்பளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் முக்கியம். ஒவ்வொரு கிராமமும் இன்டர்நெட்டால் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் 5 ஜி சேவையை பெறவுள்ளோம். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் பயணித்து வருகிறோம். கல்வி, விவசாயத்தில் டிஜிட்டல் புரட்சி வரும்.

மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது. தரமான பொருட்களை நாம் உற்பத்தி செய்து வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பெருமையை தேடி தந்துள்ளது. வெளி நாட்டு பொருட்கள், பொம்மைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பிறரை சார்ந்திருக்காமல் வாழ வேண்டும்.

பாதுகாப்பு துறையில் நாம் 300 தளவாடங்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறோம். தற்சார்பு கொள்கை அரசின் கொள்கை அல்ல. இது மக்கள் இயக்கம். தற்சார்பை நாம் முன்னெடுத்து செல்வோம். பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலும். டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது. ஊழலுக்கு எதிரான எண்ணம் வர வேண்டும். நாட்டை கொள்ளை அடித்தவர்கள் தக்க தண்டனை பெற்றே தீர வேண்டும். அதில் எந்தவொரு பெரிய நபரும் தப்பிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான போரில் மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குடும்ப அரசியல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். இது தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், வந்தே மாதரம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.