தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், இன்னும் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைப்பேன் என்றும் கூறினார். அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்கு தலைவர்கள் பாடுபட்ட கடந்த கால வரலாற்றை நான் எண்ணி பார்க்கிறேன். விடுதலை போராட்டத்திற்கு எதிராக முதன் முதலாக தமிழக மன்னர்கள் தான் குரல் கொடுத்தனர். மாநிலம் முழுவதும் முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமை பெற்று தந்த மறைந்த முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்கிறேன். சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த தியாகிகள், அவரது குடும்பத்தினரை வணங்குகிறேன். சுதந்திரத்திற்கு பாடுபட்டட தமிழகத்தை சேர்ந்த பாரதியார், சுப்பிரமணி சிவா, திருவிக, சிவகங்கை பனையூரை சேர்ந்த கான்சாகிப், வரியை தர மாட்டேன் என்ற கட்டப்பொம்மன், எட்டப்பர்களை பார்த்து சிரித்தவர் அவர். மாவீரன் சுந்தரலிங்கம், வடிவு, வீரநாச்சியார், குயிலி, சின்னமருது, பெரியமருது, தீரன்சின்னமலை, அழகுமுத்துக்கோனின் வீரம், சிங்காரவேலன், பகத்சிங், தோழர் ஜீவா, கர்ம வீரர் காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத் முத்துராமலிங்கம், திருப்பூர் குமரன், ஆகியோரை வணங்குகிறேன்.
தியாகத்தை போற்றுவதில் திராவிட அரசு எப்போதும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு சிலை வைத்தது எங்களின் அரசு. தியாகிகளுக்கு நினைவு மண்டபம், வாரிசுகளுக்கு வீடு, தலைவர்களுக்கு சிலை என திராவிட இயக்கம் போற்றி வருகிறது. இந்த சுதந்திர நாளில் சுதந்திர போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கட்டபொம்மன், மருதுபாண்டி, விஜய ரகுநாத சேதுபதி வழித்தோன்றல் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%-ல் இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.1,947 கோடியே 60 லட்சம் கூடுதலாகச் செலவாகும்.
தமிழகம் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. பெண்களுக்கு இலவச பயணம், வேளாண் துறைக்கு பட்ஜெட் என பல சாதனைகள் படைத்துள்ளோம். 2 ஆயிரம் கோடிக்கு மேலான கோவில் சொத்துக்களை மீட்டுள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பலரும் பயன் பெற்றுள்ளனர். போதை பொருள் ஒழிப்பு பணி சிறப்பாக நடக்கிறது. இன்னும் தமிழக வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைப்பேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து நடந்து விழாவில் விருதுகள் வழங்கினார் முதல்வர். ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் விருது, பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆய்வு நிறுவன இயக்குனர் இஞ்ஞாசி முத்துக்கு அப்துல் கலாம் விருது, எழிலரசிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்று திறனாளி நலனுக்கு உழைத்த டாக்டர் ஜெய்கணேஷ் மூர்த்தி , சமூக சேவகர் முனைவர் பங்கஜம், பிரியா உள்ளிட்டோருக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் முதல்வர் ஸ்டாலின் , காந்தி சிலையை திறந்து வைத்தார்.