அரசாங்கமும் அன்பில் பொய்யாமொழியும் ஏமாந்து விட மாட்டோம்: அன்பில் மகேஷ்!

அரசு தொலைக்காட்சி சிஇஓ நியமனம் தொடர்பாக அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்து விட மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் கல்வித்துறையில் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உட்பட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கல்வித் தொலைக்காட்சி நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

நேற்றிரவு சமூகவலை தளங்களில் ஒரு ஹாஸ்டேக் கண்டேன் அதில் என்னடா பேர் அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை என்று நினைத்துக் கொண்டேன். கல்வி தொலைக்காட்சி இதில் விவாதம் செய்த நண்பர்கள் ஆதரவு தெரிவித்த நண்பர்கள் கோரிக்கையாக அறிவுரை சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பள்ளிக்கல்வித்துறைக்கு டிவி கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை மேம்படுத்த வேண்டும் என்று கூட்டத்தொடரில் பேசினோம். ஒரு தொலைக்காட்சி பத்தாது இரண்டாவது தேவை என்று சொல்லி அதில் நிர்வாகிப்பதற்காக ஒரு அழைப்பாணை விடுவித்தோம். 79 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். இதில் தகுதியின் அடிப்படையில் அதில் 11 பேரை தேர்ந்தெடுத்து அதில் மூன்று பேரை தேர்வு செய்தனர். நாங்கள் அதை தேர்வு செய்யவில்லை அதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு அது கல்வித்துறை இயக்குனர் என ஐந்து பேர் சேர்ந்து தேர்வில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பலர் என்னிடம் அவருக்கு நண்பர் இவருக்கு நண்பர் என கூறினர். நண்பர் என மட்டும் பாராமல் அவர் எப்படி வேலை செய்கிறார் என்று பார்க்கலாம் என்பது போல் தான் இரண்டு நாட்களாக வைரலாக இந்த செய்தி வருகிறது. இது குறித்து அவருடைய பின்புலம் என்ன என்பதை குறித்து விசாரிக்கவும், பணி நியமனத்தை நிறுத்தி வைக்க கூறி இருக்கிறேன். அரசாங்கமும் அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்து விட மாட்டோம் என சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அன்பில் மகேஷ் வளர்ந்திருக்கிறேன் என்றால் அது உங்களால் தான். எதையும் நான் பாசிட்டிவ்வாவே எடுத்துக் கொள்கிறேன். நான் எந்த அளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அந்த அளவு நான் கவனமாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.