தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்று, டெல்லி பயணம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, இன்று, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதன் பின்னர், டெல்லியில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது. தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளேன். தமிழகத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது நீட், புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்னை, மேகதாது அணை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.