கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை்கு ரூ.50 லட்சம் நிதியுதவிக்கான டிடியை ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். மேலும் உணவு, பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டன. இதனால் மக்கள் போராட்டம் வீரியமானது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜிமானா செய்தனர். தற்போது இலங்கையில் புதிய ஆட்சி நடக்கிறது. அதிபராக ரணில் விக்ரமசிங்கே உள்ளார். இதற்கிடையே இலங்கை அரசு பல்வேறு நாடுகளில் உதவி கேட்டு வருகிறது. இலங்கைக்கு இந்தியா அதிகளவில் உதவி செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழக அரசு சார்பில் தனியாக இலங்கைக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். ரூ.15 கோடியில் 500 டன் பால் பவுடர்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவும், ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூபாய் 28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்களை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. மேலும் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் எனக்கூறினார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் 2 முறை கப்பல்களில் ஏராளமான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று ஓ பன்னீர் செல்வம் ரூ.50 லட்சம் நிதியுதவி செய்வதாக சட்டசபையில் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் டிடி எடுத்து தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சரான ஓ பன்னீர் செல்வம் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
இலங்கை நாடு ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழக அரசின் சார்பில் இலங்கை நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். அப்போது என் குடும்பத்தின் சார்பில் ஐம்பது லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று 29-04-2022 அன்று தமிழ்நாடு சட்டசபையில் நான் அறிவித்தேன். இதன் அடிப்படையில் எனது மூத்த மகனும், மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் வங்கிக் கணக்கிலிருந்து இருபத்தைந்து லட்சத்திற்கான வரைவோலை, எனது இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இருபத்தைந்து லட்சத்திற்கான வரைவோலை என மொத்தம் ஐம்பது லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகைச் சீட்டினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.