பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: கோரிக்கை மனு அளிப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது. இதில் நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை காவிரி விவகாரம், மேக்கேதாட்டு அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற தேவைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி தொகையினை விடுவிப்பது, மழைக்காலம் வரவுள்ளதால், பேரிடர் நிவாரணம் போன்றவற்றை விடுவிப்பது குறித்தும், தமிழகத்தின் உள்கட்டமைப்புகளான சென்னை விமான நிலைய விரிவாக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவை குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.

மேலும், காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாது அணை, நீட் தேர்வு விலக்கு, என்.எல்.சியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை, மின்சார சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் பாதிப்பு, நிலுவையில் உள்ள நிதியை விடுவிப்பது என்பன உள்ளிட்ட இன்னும் பல முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். குறிப்பாக ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நீட் தேர்வு விலக்கை முதல்வர் ஸ்டாலின் இந்தச் சந்திப்பின் போது பிரதமருக்கும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டினார்.

இதனிடையே குறைந்த நாட்களில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை எந்த குறையும் இல்லாமல் நடத்தியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். அதேபோல் தொடக்க விழாவின் போது நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் அவர் பாராட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இவைகளை தவிர பரஸ்பர நலம் விசாரிப்பும் இந்தச் சந்திப்பின் போது நடைபெற்றிருக்கிறது.

இந்தச் சந்திப்பின் போது உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும், தமிழ்நாட்டின் தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில், மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்பு கவுணி, கேழ்வரகு, கம்பு, சீரக சம்பா, சாமை, தினை, வரகு முதலியவை அடங்கியிருந்தன.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய மூன்று பேருடனான சந்திப்பு இனிதே நிறைவுற்றதால் இன்று இரவே முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். இதனிடையே அண்மையில் டெல்லி சென்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்பதும் அவர்களுக்கு நேரம் ஒதுக்க முன்வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.