இளம்பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை இத்தனை தயக்கம் காட்டுவது ஏன் என்றும் நீதிபதி கேள்வியெழுப்பினார்.
பீகார் பாஜக மூத்த தலைவராக இருப்பவர் ஷாநவாஸ் உசேன் (53). பாஜகவில் தேசிய செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், தற்போது அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையிலும் ஷாநவாஸ் உசேன் இடம்பெற்றுள்ளார். தற்போது பீகார் தொழில்துறை அமைச்சராக இருந்து வந்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அண்மையில் பாஜக உடனான கூட்டணியை முறித்து அரசை கவிழ்த்ததால் இவரது அமைச்சர் பதவி பறிபோனது.
இதனிடையே, இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பலாத்கார புகார் அளித்தார். அதில், தன்னை ஏமாற்றி ஷாநவாஸ் உசேன் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். ஆனால் காவல் நிலையத்தில் ஷாநவாஸ் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கூட பதிவு செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, ஷாநவாஸ் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி டெல்லி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷாநவாஸ் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அதே ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. ஆனால் அப்பொழுதும் போலீஸார் வழக்கு பதியவில்லை. பின்னர், மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஷாநவாஸ் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும் கூட பாஜக தலைவர் ஷாநவாஸ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் சுதந்திரமாக நடமாடி வந்தார். ஆனால், அந்த இளம்பெண் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பெண் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஷாநவாஸ் உசேன் எனக்கு இழைத்த கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக போலீஸாரிடம் கூறிய போதிலும், அவர் மீது வழக்கு செய்ய காவல்துறையினர் மறுக்கின்றனர். எனவே என்னை பலாத்காரம் செய்த ஷாநவாஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என அப்பெண் கோரியிருந்தார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள், போலீஸார் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த மனுவானது நீதிபதி ஆஷா மேனன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
மனுதாரர் அளித்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் 2018-இல் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவில் எந்த முரண்பாடுகளும், சந்தேகங்களும் இல்லை. அப்படி இருக்கும்போது, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோருவதில் எந்த அர்த்தமும் இல்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட, ஷாநவாஸ் உசேன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. போலீஸாருக்கு ஏன் இந்த தயக்கம்? காவல்துறை அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணை 4 முறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், ஏன் எஃப்ஐஆர் கூட பதியப்படவில்லை? இதுகுறித்து போலீஸார் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
எஃப்ஐஆர் என்பது காவல்துறையை விசாரணை மேற்கொள்ள செய்வதற்கான ஒரு நடைமுறை. ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எஃப்ஐஆர் தான் அடித்தளம். விசாரணை நடந்தால்தானே ஒரு குற்றம் நடந்ததா, இல்லையா என முடிவுக்கு வர முடியும். எனவே, மனுதாரரின் புகார் தொடர்பாக எதிர் மனுதாரர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். டெல்லி உயர் நீதிமன்ற, ஷாநவாஸ் ஹுசைனின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஷாநவாஸ் ஹுசைன் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ஷாநவாஸ் ஹுசைன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த முதல் தகவல் அறிக்கை அவரது புகழை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.