நெல்லை கண்ணன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

மறைந்த நெல்லை கண்ணன் உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ் ஆர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான, ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், இலக்கிய மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இலக்கியவாதியும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் இன்று காலமானதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் நெல்லை டவுன் அம்பாள் சன்னதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை கண்ணன் மறைவு செய்தி கேட்டு முதல்வர் அதிர்ச்சி கலந்த வருத்தம் அடைந்தார். உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரண்டு அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளோம். தமிழ் இலக்கியவாதியும் தமிழ்சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் மறைந்தது வருத்தமளிக்கிறது. முதல்வரும் நெல்லை கண்ணன் குடும்பத்தார் துக்கத்தில் பங்கெடுத்துள்ளார். முதல்வர் சார்பிலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆன வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான். சமய நிகழ்ச்சியாக இருந்தாலும், பட்டிமன்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார். இந்த வீட்டிற்கு ராஜீவ் காந்தி வந்து உணவருதி விட்டுச் சென்றதாகவும் என்னிடம் தெரிவித்தார். காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாக கொண்டு செயல்பட்டவர். அவரது இழப்பு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் அவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்காமல் சென்று விட்டாலும் நெல்லை மாவட்ட மக்களின் மனநிலையில் அவர் ஒருபோதும் மறைவதில்லை. இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பெரிய இழப்பாக உள்ளது. நெல்லை கண்ணன் மறைவு நெல்லைக்கு இழப்பு, இலக்கிய உலகிற்கு இழப்பு. நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணன் புகழ் நீடித்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

பிரபல பேச்சாளரும் தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுடன் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவால் வருத்தம் அடைந்தேன். நெல்லை கண்ணனின் தமிழ்ப்பங்களிப்பை போற்றும் வகையில் கடந்த ஆண்டு அரசு சார்பில் இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது. விசிக சார்பில் கடந்த ஆண்டு வழங்கிய காமராஜர் கதிர் விருது பெற்றபோது மேடையில் அன்பு பாராட்டினார் நெல்லை கண்ணன். நெல்லை கண்ணை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், தமிழுலகினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

திராவிட கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்குச் சிந்தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றலாளருமான நண்பர் நெல்லை கண்ணன் அவர்கள்(வயது 78) வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று (18.8.2022) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது.அவரது இடத்தை எவரும் எளிதில் நிரப்ப இயலாது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான திரு. நெல்லை கண்ணன் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். மகாகவி பாரதியார், பெருந்தலைவர் காமராஜர், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரைப் பற்றி திரு. நெல்லை கண்ணன் ஆற்றிய சொற்பொழிவுகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை எவரும் மறந்திட இயலாது. இலக்கிய பட்டிமன்ற நடுவராக பொறுப்பேற்று கூறிய கருத்துகள் மிக ஆழமானவை, சிந்திக்கக் கூடியவை. மிகுந்த நகைச்சுவையோடு பேசக் கூடியவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இளமைப் பருவம் முதல் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி பல பொறுப்புகளை வகித்தவர். தமிழகம் அறிந்த திரு. நெல்லை கண்ணன் அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.