மகாராஷ்டிரத்தில் ஆளில்லாத படகிலிருந்து ஏகே- 47 துப்பாக்கிகள் பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியைச் சேர்ந்த கடற்கரையில் ஆளில்லாத படகு ஒன்று நீண்ட நேரம் கடலில் தத்தளித்துள்ளது. இதனைக் கண்ட கடலோரக் காவல்படை அப்படகிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, ஏகே – 47 ரக துப்பாக்கிகள் உள்பட சில ஆயுதங்கள் அடங்கிய பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பையில் இன்னும் 10 நாள்களில் விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளதால் இது பயங்கரவாத ஊடுருவலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்திற்குரிய இந்த படகு குறித்து விசாரணை மேற்கொள்ள மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ராய்காட் எம்எல்ஏ அதிதி தாட்கரே கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கரை ஒதுங்கிய படகு ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் வந்தவர்கள், கடற்கரையில் நுழைந்தது குறித்து கடலோர காவல்படையிடம் தகவல் ஏதும் கூறவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படகு குறித்து விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., கூறியுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் வினீத் அகர்வால் கூறுகையில், பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த படகு ஓமனில் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது என்றார்.