தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பாமக தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தமது 3 நாட்கள் நடைபயணத்தை இன்று தொடங்கி உள்ளார்.
காவிரியின் உபரிநீர்- தருமபுரியின் உயிர்நீர் என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணத்தை தொடங்கி உள்ளார். ஒகேனக்கல்லில் தொடங்கி பொம்மிடி வரை இந்த நடைபயணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இம் மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போதும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனாலும், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது ஆகும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்த திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்த திட்டம் குறித்து தருமபுரி மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் ஒகேனக்கலில் தொடங்கி 3 நாட்களுக்கு பிரசார நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி, சோலைக்கொட்டாய், கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொம்மிடியில் நடைபயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன். இந்த நடைபயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும். அரசு தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.