டேராடூன் அடுத்த சார்கெட் கிராமத்தில் அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பால் விடாமல் கொட்டித் தீர்த்து வரும் பெருமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அடுத்த சார்கெட் கிராமத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் திடீரென மேகவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே நல்ல மழை பெய்து கொண்டிருக்கையில் மேகவெடிப்பு நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமல் கொட்டித் தீர்த்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேகவெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சார்கெட் கிராமத்தில் சிக்கிக் கொண்ட நபர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய செய்து வருகின்றனர். இதற்கிடையில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்றுள்ள மக்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் கோயிலில் தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் பக்தர்களை பத்திரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் களமிறங்கியுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டேராடூனில் உள்ள புகழ்பெற்ற தப்கேஸ்வர் மகாதேவ் கோயிலை ஒட்டி பாயும் தமாஷா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும் மாதா வைஷ்ணோ தேவி குகை யோகோ கோயில் மற்றும் தப்கேஷ்வர் மகாதேவ் ஆகியவற்றின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த குளமும் சேதமடைந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்த திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாலம் அடித்துச்செல்லப்பட்டதில் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கானாமல் போனவர்களை அதிகாரிகள் தேடி வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் அமர்நாத் புனித குகை பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் வழித்தடம் சேதமடைந்தது. தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க 4 எம்.ஐ-17வி5 மற்றும் இந்திய விமானப் படையின் 4 சீடல் ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக கனமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரெயில்வே பாலம் ஒன்று உடைந்து விழுந்துள்ளதாகவும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு இன்னும் குறையவில்லை என்றும் வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது, குடியிருப்பாளர்களை சிக்க வைத்தது. மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர் என்றும் மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்துள்ளார். மண்டி, கங்கரா மற்றும் சம்பா மாவட்டங்களில் அதிகபட்ச சேதம் பதிவாகியுள்ளது என்றும் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.