ஆம் ஆத்மி தலைமையகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி. அமைச்சரவையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கோரிக்கை.
டெல்லியில் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்பட 15 இடங்களில் நேற்று சிபிஐ பல மணிநேரம் சோதனை செய்தது. சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் 15 பேரில் மணீஷ் சிசோடியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சிபிஐ விசாரணையில் முறைகேடு புகாருக்கு உள்ளாகியுள்ள மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கும் எதிராக கண்டன குரல் எழுப்பியவாறு டெல்லி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். அமைச்சரவையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்றும் டெல்லி காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இது டெல்லி அரசியலையே சூடு ஏற்றி உள்ளது. எதிர்வரும் குஜராத் தேர்தலை மனதில் வைத்து இது ஆம் ஆத்மி மீதி நடத்தப்படும் தாக்குதல் எனவும் ஆம் ஆத்மி சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது டெல்லியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.