மும்பையில் மீண்டும் தாக்குதல்: குறுஞ்செய்தி மிரட்டலால் பரபரப்பு!

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே, மும்பையில் இருந்து சுமார் 190 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக், ஸ்ரீவர்தன் கடற்கரை பகுதியில் ஆள் இல்லாத மர்ம படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அதில் 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் படகை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்தப் படகு ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது என்றும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கியபோது நடுக்கடலில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அது மும்பை அருகே கரை ஒதுங்கியதாகவும் தெரியவந்தது.

இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து, 26/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியாவில் 6 பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.