மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி இன்று டெல்லியில் உள்ள வீர் பூமியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாடினார்கள். இதையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் “அப்பா, நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்” என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்தி குறித்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு துறை பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த ஒரே பதவி காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனைகளை நினைவு கூரப்படும். தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்தினார். கம்ப்யூட்டர், டெலிகாம், சாப்ட்வேர், வளர்ச்சி சகாப்தத்தில் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றவர். இது தவிர மேலும் பல எண்ணற்ற புதிய திட்டங்களை தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.