அரவிந்த் கெஜ்ரிவால் கொள்ளைக் கும்பல் தலைவர்: அனுராக் தாக்கூர்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொள்ளைக் கும்பல் தலைவர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டினார். அதன்படி, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சுமார் 14 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மதுபானக் கடை உரிமை கொள்கையில் தவறில்லை என்றால் அதை திரும்பப் பெறக் காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். சாராய வியாபாரிகள் மீது உங்களுக்கு என்ன கரிசனம் என்று கேள்வி எழுப்பிய அவர், நீங்கள் குற்றமற்றவர்கள் என்றால் 24 மணி நேரத்துக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கிய ஊழலில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தான் முதல் குற்றவாளி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொள்ளைக் கும்பல் தலைவர். மணீஷ் சிசோடியா மவுனமாக இருப்பதால் இனிமேல் அவரை ‘Money Shh’ என்றுதான் சொல்ல வேண்டும் என விமர்சித்து அதுதொடர்பான பதாகை ஒன்றையும் அனுராக் தாக்கூர் காண்பித்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் சிசோடியா, ஓரிரு நாட்களில் தான் கைது செய்யப்படலாம் என்றும், இதற்காக பயப்பட மாட்டோம் என்றும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

டெல்லி கலால் கொள்கை முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டது. அதில் எந்த ஊழலும் இல்லை. எனது குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் கொடுக்காத சிபிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நல்ல அதிகாரிகள், ஆனால் ரெய்டு நடத்தும்படி அவர்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. அவர்களின் பிரச்சனை கலால் கொள்கை ஊழல் பற்றியது அல்ல. கலால் கொள்கையில் எந்த மோசடி நடந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் கெஜ்ரிவாலைக் கண்டு பயப்படுகிறார்கள். குறிப்பாக, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு இந்த கவலை அதிகரித்துள்ளது. எனவே, எனது வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனை மற்றும் எனக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், அரவிந்த் கெஜ்ரிவாலை தடுத்தவே நடைபெறுகின்றன.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். முதலில் சுகாதாரத்துறை பொறுப்பில் இருந்த சத்யேந்தர் ஜெயினை கைது செய்தனர், அடுத்த ஓரிரு நாட்களில் நானும் கைது செய்யப்படுவேன். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கெஜ்ரிவால் ஏழை மக்களைப் பற்றி சிந்திக்கிறார், பிரதமர் மோடி தனது தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களைப் பற்றி சிந்திக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலானது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.